பைக் வேகத்தில் பாதியாவது திரைக்கதைக்கும் வேண்டாமா? - 'வலிமை' திரைப்பார்வை
நீண்ட பெரும் எதிர்பார்ப்புகளை அடுத்து இன்று திரைக்கு வந்திருக்கிறது வலிமை. அஜித், எச்.விநோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய இந்த சினிமா உண்மையில் தமிழ் சினிமா ரசிகர்களை பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம்.
நேர்மையான காவல்துறை அதிகாரி அர்ஜுனாக வருகிறார் அஜித். சாத்தானின் அடிமைகள் என்ற குழு போதைப் பொருள் விற்பனை, நகைபறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடு படுகின்றன. டெக்னாலஜி உதவியுடன் அவர்கள் செய்யும் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாமல் திணரும் அஜித் மற்றும் காவல்துறை அந்த கும்பலை எப்படி சேஸ் செய்தது என்பதே திரைக்கதை.
ஒன்லைனாகப் பார்த்தால் சூப்பர் என்று சொல்லத் தோன்றலாம். ஆனால் மிகப்பழைய திரைக்கதை டெம்ப்ளேட்டை எடுத்து அதில் பைக் ஸ்டண்ட், டெக்னாலஜி என சில விசயங்களை சேர்த்து புதுமை செய்ய முயன்றிருக்கிறார்இயக்குநர் எச்.விநோத். வழக்கமான மாஸ் ஹீரோ கதைகளைப் போலவே அஜித்துக்கும் நல்ல அன்பான குடும்பம் இருக்கிறது. குடிகார அண்ணன், வேலை இல்லாத தம்பி, அன்பான அம்மா இவர்களை சுமக்கும் பொறுப்பில் ஒரு நல்ல சகோதரனாக இருக்கிறார் அஜித். ஆனால் இப்படத்தில் எந்த இடத்திலும் செண்டிமெண்ட் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. காரணம் இவை எல்லாம் தமிழ் சினிமா உருவான காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கும் காட்சிகள்.
அஜித் தனது முந்தைய படங்களைவிடவும் இதில் குறைந்த கிலோமீட்டர்களே நடந்திருக்கிறார். அதிக தூரம் பைக்கில் பயணிக்கிறார் என்பது ஆறுதல். படத்தின் நாயகி ஹுமா குரேஷி'க்கு இக்கதையில் மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கேற்ற ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை. படம் முழுக்க அஜித் மட்டுமே ஆட்கொள்கிறார்.
ஜிப்ரானின் பின்னனி இசை ஓகே. யுவனின் பாடல்கள் எதுவுமே முனுமுக்க வைக்கவில்லை. படத்தின் மிகப் பெரிய பலமாக பைக் ஸ்டண்ட் காட்சிகள் மட்டுமே உள்ளன. அவை வலிமையாக அமைந்திருப்பதால் கதையில் பெரிய கவனம் செலுத்த வேண்டியதில்லை என நினைத்துவிட்டார் போல இயக்குநர். போலீஸ் வாகனத்தில் வில்லன் கார்த்திகேயாவையும் அஜித்தின் தம்பி குட்டியும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அப்போது அவர்களை சூழும் பைக் குழு தன் எஜமானர்களை காப்பாற்ற முயல்கிறது. இந்த ஸ்டண்ட் காட்சியில் உழைத்த அனைத்து ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் மிகப்பெரிய பாராட்டுகள். ஸ்டாண்ட் காட்சிகளை படம்பிடிப்பதில் சவாலை சந்திக்கும் மற்றொரு நபர் ஒளிப்பதிவாளர். அவ்வகையில் நீரவ்ஷா நல்ல ஒளிப்பதிவைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
ஏற்கெனவே தீரன் என்ற போலீஸ் கதையினை உண்மைக்கு நெருக்கமாக கொடுத்த எச்.விநோத் இதில் எங்கே போனார் எனத் தெரியவில்லை. படத்தின் முதல் பாதியில் இருக்கும் திரைக்கதை ஒழுங்கு இரண்டாம் பாதியில் இல்லை. அதனால் படத்தின் இரண்டாம் பாதியில் ரசிக்கத்தக்க சண்டைக் காட்சிகள் இருந்தாலும் அது ரசிகர்கள் மனதில் எந்த பெரிய அசைவை தரவில்லை. கண்டுபிடிக்கவே முடியாத பெரிய நெட்வொர்க்காக வளர்ந்து நிற்கும் வில்லன் குழு கதையில் “டேய் உன் அம்மாவ கடத்தி வச்சிருக்கேன், உன் குடும்பத்த சும்மாவிட மாட்டேன்” என நம்பியார் காலத்து வில்லனாக மாறிவிடுவது துன்பம்.
வேலை இல்லை என்பதால் வீட்டில் சரியான மரியாதை கிடைக்காத இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள் என்பது வரை கூட மனவலிமையுன் ஓரளவு ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் சாத்தானின் அடிமைகள் என்ற குழுவின் தலைவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராவது நம்பத்தகுந்ததாக இல்லை. ஐரோப்பிய கலாச்சாரத்தில் இப்படியாக குழுக்கள் இருப்பதும் அவை ஐரோப்பிய சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதும் ஓரளவு உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த அண்டர் வேல்ட் கான்சப்ட் நம்மூருக்கு துளியும் எடுபடவில்லை.
என்னோட பைக் ரைஸர் சிட்டிய என்ன பண்ணப் போறாங்க பாரு பாரு என வில்லன் ஒருமுறைக்கு சில முறை சொல்கிறார். கடைசிவரை காத்திருந்தோம் அவர்கள் எதும் செய்யவில்லை என்பதை ரசிகர்கள் மிகுந்த மன வலிமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நல்ல திரை அனுபவத்திற்காக. சண்டைக் காட்சிகளுக்காக வலிமையை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நல்ல சினிமாவை நோக்கி நகரவேண்டிய நாம் தொடர்ந்து ஒரே சாலையில் ஒன்வேயில் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
கருத்துகள்
கருத்துரையிடுக