வேதநாயகம், ஜிந்தாவாக மிரட்டிய நடிகர் சலீம் கவுஸ் காலமானார்... திரைப்பிரபலங்கள் இரங்கல்
பிரபல பழம்பெரும் வில்லன் நடிகரான சலீம் கவுஸ் உடநலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70.
கடந்த 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி சென்னையில் பிறந்து வளர்ந்த சலீம் கவுஸ், மாநிலக் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர். மேலும், புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிட்யூட்டில் பட்டப்படிப்பு படித்துள்ளார். நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பின்னர் நாடகங்களை இயக்கியும் உள்ளார்.
மேலும், தொலைக்காட்சித் தொடர்களில் ராமா, கிருஷ்ணா, திப்பு சுல்தான் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிகர் சலீம் நடித்துள்ளார். 1978-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஸ்வர்க் நரக்’ படத்தில் மாணவனாக அறிமுகமான சலீம், அதன்பிறகு இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.
பின்னர் பிரதாப் போத்தன் இயக்கத்தில், கமல்ஹாசன், பிரபு, அமலா நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு, கடந்த 1989 -ம் ஆண்டு வெளியான ‘வெற்றி விழா’ படத்தில் வில்லனாக அறிமுகமானநிலையில், அந்தப் படத்தில் ஜிந்தா கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். குறிப்பாக, ‘ஸ்டீஃபன் ராஜ்.. மை டியர் ஸ்டீஃபன் ராஜ்’ என இவர் தனித்துவமான குரலில் அழைக்கும் அந்த ஸ்டைல் மறக்கவே முடியாது.
இதையடுத்து, ‘சின்ன கவுண்டரில்’ சக்கர கவுண்டராக, ‘மகுடம்’ படத்தில் தில்லைநாதனாக, ‘செந்தமிழ் பாட்டு’ படத்தில் ராஜரத்னம், ‘தர்மசீலன்’, ‘திருடா திருடா’, ‘ரெட்’, ‘சாணக்யா’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பார். விஜயின் ‘வேட்டைக்காரன்’ படத்தில் ‘வேதநாயகம்னா பயம்’ என வேதநாயகமாக வாழ்ந்து இருப்பார்.
தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஆண்ட்ரியாவின் த்ரில்லர் படமான ‘கா’ படத்தில் கடைசியாக நடித்துள்ளார். இந்தப் படம் இதுவரை வெளிவராதநிலையில், ‘தி லயன் கிங்’, ‘சுதந்திரம்’, ‘300’ உள்ளிட்ட படங்களுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். இந்நிலையில், 70 வயதான அவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
கருத்துகள்
கருத்துரையிடுக