`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’

விக்ரம் படம், கமலின் திரைப்பயணத்தில் வெகுநாட்கள் கழித்து மிகப்பெரிய வசூல் ரீதியான வெற்றியை கொடுத்த படம். இந்த பெருமையுடன், கொரோனாவுக்குப் பின் தமிழ் சினிமாவை மீட்டெடுத்த பெருமையும் விக்ரமுக்கு உண்டு. இப்படி இன்றைய சூழலில் பல பெருமைகளை கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கான பல வழிகளில் ப்ரமோஷன் செய்தது படக்குழு. அதில் முக்கியமான ஒன்று நடிகர்கள் ஜெயராம் - ஸ்ரீமன் - யூகி சேது - ரமேஷ் அரவிந்த் ஆகியோரின் நடிப்பில் - கமலின் ப்ரசன்ஸூடன் வெளியான ப்ரமோ. இந்த `பஞ்சதந்திர’ மேஜிக் கூட்டணி இணைந்து நடித்திருந்த `பஞ்சதந்திரம்’ படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது.

20 ஆண்டுகள் கழித்தும், இப்போதும் பஞ்சதந்திரம் ரசிகர்கள் மத்தியில் நிரம்பிக்கிடக்க காரணம், அது எடுத்துக்கொண்ட நகைச்சுவை ஜானர் மிகமுக்கிய காரணம். பஞ்சதந்திரம் கதைகளத்தின்படி, 5 நண்பர்கள். ஒவ்வொருத்தரும் தென் இந்தியாவின் ஒவ்வொரு மொழி பேசுபவர். ஒருவர் மலையாளம், ஒருவர் தெலுங்கு, ஒருவர் கன்னடம், ஒருவர் தமிழ், இன்னுமொருவர் மேற்கூறிய நான்கு மொழியையும் சகஜமாக பேசுபவர். இந்த ஐவரையும் இணைக்கும் புள்ளி, ஃப்ரெண்ட்ஷிப்! என்ன ஆனாலும் இணைபிரியாத அந்த ஐவர் குழு, தாங்கள் செய்யாத ஒரு கொலையை தாங்கள் தான் செய்துவிட்டதாக எண்ணி, அதிலிருந்து வெளிவர நினைத்து போராடுவதுதான் கதைக்களம்.

image

ஒன்லைனாக கேட்கும்போது சீரியஸாக தோணலாம். ஆனால் முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காமெடி படத்தை இனி நினைத்தாலும் எடுக்க முடியாது எனும் அளவுக்கு நகைச்சுவையால் இந்தப் படத்தை நிரப்பி எடுத்திருப்பார்கள். படத்துக்கு வசனம், கிரேஸி மோகன். திரைக்கதை, நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும்!

பஞ்சதந்திரம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை, சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நடிகர் கமல் எப்போதுமே தன்னை தான் சார்ந்த துறையான சினிமாவை அடுத்துக்கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய நபராகவே இருந்திருக்கிறார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதற்கு பல படங்களை நாம் உதாரணம் சொல்லலாம் என்றாலும், அதில் முக்கியமானது பஞ்சதந்திரம்.

image

20 வருடங்கள் கழித்தும், இன்றளவும் `பஞ்சதந்திரம்’ படம் புதுசாகவே இருக்க, சில காரணங்கள் உள்ளன. அவற்றில் மிகமுக்கியமான சில சுவாரஸ்ய விஷயங்கள் இங்கே:

* சினிமா இன்று அடைந்திருக்கும் பேன்-இந்தியா வளர்ச்சிக்கும், மல்டி-ஸ்டார் கேஸ்டிங்கிற்கும் வித்திட்ட முக்கிய படம் பஞ்சதந்திரம். அன்றைய காலகட்டத்தில் முன்னணியிலிருந்த நடிகர்கள் ஜெயராம் - யூகி சேது - நாகேஷ் - ஸ்ரீமன் - மணிவண்ணன் ஒருபக்கம் என்றால், நடிகைகளில் சிம்ரன் - தேவயானி - ரம்யா கிருஷ்ணன் - சங்கவி - ஊர்வசி என நடிகைகள் பட்டியலும் படத்தில் உண்டு. எல்லோருக்கும் அவர்களுக்கான அளவில் முக்கியத்துவம் கொடுத்து, நல்ல ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்திருப்பார்கள்.

image

* பஞ்சதந்திரம் படமானது, கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் அவருக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்த மிகப்பெரிய படம். ஏனெனில் அதற்கு முன் வந்திருந்த ஆளவந்தான் திரைப்படம், அவருக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியையே கொடுத்திருந்தது. மேலும் பஞ்சதந்திரம் வெளிவந்த சமயத்தில்தான், நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்திருந்தார். இதனால் தனிப்பட்ட வாழ்விலும் சவாலான காலகட்டத்தில் அவர் இருந்தார். பஞ்சதந்திரம் படம் வெளியாகையில், கமல் கொடுத்த பேட்டியொன்றில் "படத்தைப் பற்றி வெளிவரும் எல்லா விஷயங்களுமே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்திருந்தாலும், இந்தப் படம் என் முகத்தில் எப்போதும் புன்னகையை வரவழைத்தது. என்னை அமைதிப்படுத்தத் தேவையான விஷயமாக படம் உள்ளது" என்று பேசியிருந்தார்.

* பொதுவாக `பஞ்சதந்திர கதைகள்’ எனப்படும் நீதிக்கதைகள், பிரபலமான விஷயம். நம் எல்லோருடைய குழந்தைப்பருவத்திலும், வீட்டுப்பெரியவர்களிடமிருந்து பஞ்சதந்திர கதைகளை நாம் கேட்டிருப்போம், அல்லது புத்தக வடிவில் படித்திருப்போம். இவ்வகை கதைகளில், முதலில் ஒரு தவறை சொல்லிவிட்டு, பின் அதிலிருந்து நீதி ஒன்றையும் சொல்லும். `பஞ்சத்தந்திரம்’ படமும், ஒரு தவறினால் ஏற்படும் விளைவுகளை விரிவாக சொல்லிவிட்டு - பின் அதிலிருந்து நீதி ஒன்றை சொல்லிக்கொடுக்கும். பொதுவாக நம் வீடுகளில் பெரியவர்கள் குழந்தைகளுக்கு பஞ்சதந்திர கதைகள் சொல்வது வழக்கம். இதையொட்டி, படமும் சிம்ரன் தனது குழந்தைக்கு கதை சொல்வதுபோல அமைக்கப்பட்டிருக்கும்.

image

அதேநேரம், பஞ்சதந்திரம் என்பது பாண்டவர்களின் கதையை குறிப்பது போலவே ஐந்து ஆண்கள் (கமல், ஜெயராம், யூகி சேது, ரம்கேஷ் அரவிந்த், ஸ்ரீமன்) சுற்றி நிகழும். அதுவும் ஒரு பெண்ணின் (சிம்ரன்) திருமண உறவுச்சிக்கலை சமாளிக்கப்போனதால் ஏற்படும் விளைவுகள் என்பதையே படம் பேசும்.

* பஞ்சதந்திரம் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் நாம் ஒவ்வொரு ஒன்-லைனை கவனிக்கலாம். ஒவ்வொரு முறையும், ஒவ்வொன்று நமக்கு புதிதாக கேட்கும். இன்றைய சினிமாக்களில் காமெடி என்றாலே டபுள்-மீனிங் இல்லாமல், உடல் சார்ந்த கேலிகள் இல்லாமல் எதுவும் வருவதில்லை. ஆனால் ஒரு முழு நீள காமெடி படமான பஞ்சதந்திரத்தில், டபுள்-மீனிங் காமெடிக்களே இருக்காது. எல்லாமே சூழ்நிலை காமெடிகள் தாம். உதாரணத்துக்கு `இப்போ என்ன கடையா திறக்கிறேன்? கைத்தட்றீங்க’ `கேள்வி கேட்குறது ஈஸி, பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரிமா’ `உன் பகவான் இந்த வரமெல்லாம் கூட கொடுக்குறாரா உனக்கு?’ `அது என்ன இன்னொரு கீ? டூப்ளிகேட் கீ-யா?’ `அப்டியே தட்டி ஒரு கதை சொல்லு ராம்’ `எவ்ளோ பெரிய மாத்திரை’ `தமிழ் இனி மெல்ல சாவும்னு கரெக்டா தான் சொன்னாங்க’ `முன்னாடி... பின்னாடி... என்ன இருந்துச்சு’ `எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ `படிச்ச முட்டாள்களா’ என ஒவ்வொரு காமெடியிலும் நாம் புதிது புதிதாக கேட்க ஒவ்வொரு ஒன்-லைன் கிடைக்கும்.

image

`அட இந்த வசனத்தை போன தடவை மிஸ் பண்ணிட்டோம் போல’ என நினைத்து நாம் ஒரு ஒன்-லைன் பார்த்து சிரித்து முடிக்கும் முன், அடுத்த புது ஒன்-லைன் வந்து நிற்கும். இப்படி படம் நெடுக, நாம் சிரித்து மகிழ, அத்தனை விஷயங்கள் இருக்கும்! இதற்கு சொந்தக்காரர்கள், கமலும் - கிரேஸி மோகனும்தான் என சந்தேகமே இல்லாமல் நாம் சொல்லலாம்.

image

* இந்தப் படத்தில் வைரத்தை திருடும் பெண்ணாகவும், பாலியல் தொழில் செய்பவராகவும் `மேகி’ எனும் `மரகதவல்லி’ என்ற கதாபாத்திரத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பார் ரம்யாகிருஷ்ணன். ஆனால் எந்த இடத்திலும், ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரத்தை இழிவாக சித்தரித்திருக்க மாட்டார்கள். படத்தின் போக்கில், அவரும் ஒரு கதாபாத்திரம் என போகிற போக்கில் அவருக்கும் பல ஒன்-லைன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இப்படத்திற்கு முன் அவர் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்திருந்த படையப்பா படம், அவருக்கு சீரியஸ் முகத்தையும், இறுக்கமான நபர் என்ற முகத்தையுமே அவருக்கு கொடுத்திருந்தது. அந்த முகத்தை அப்படியே மாற்றி, பஞ்சதந்திரம் படத்தில் முழுக்க முழுக்க சிரித்துக்கொண்டே சந்தோஷமாக வில்லத்தனம் செய்வார் ரம்யாகிருஷ்ணன்!

image

* ரம்யாகிருஷ்ணன் மட்டுமன்றி நடிகைகள் சிம்ரன், தேவயாணி போன்றோருக்கும் படம் வேறொரு புது ஜானரை கொடுத்திருக்கும். அதுவரை அமைதியான, காதலுக்காக போராடும், ரொமாண்டிக் ஹீரோயின் என்றிருந்த சிம்ரன் இந்தப் படத்தில் சந்தேகம் கொள்ளும் மனைவியாக, சட்டென கோபப்படும் ஷார்ட்-டெம்பராக நடித்திருப்பார். தேவயானியின் `எவ்ளோ பெரிய மாத்திரை’ காமெடி ஜானர், பஞ்சதந்திருக்கு முன்னும் பின்னும் இதுவரை அவர் ஏற்காத ஸ்வீட் சர்ப்ரைஸ் கதாபாத்திரம்!

இப்படி பஞ்சதந்திரம் 20 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்பட, பல காரணங்கள் உள்ளன. இதை எல்லாவற்றையும் விட, படம் கொண்டாடப்பட ஒரு முக்கிய காரணம் உள்ளது. அது, படம் சொல்லும் நீதி! அந்த நீதி என்னன்னா.. `பொய் சொல்லாதீங்க பாஸ்... குறிப்பா மனைவிகிட்ட!'

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்