`முடிவில் உண்மையே வெல்லும்’- விவாதத்துக்குள்ளான என்ஜாயி எஞ்சாமி... பாடகர் அறிவு விளக்கம்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், தெருக்குரல் அறிவு மற்றும் பாடகர் தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடலை, சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பெர்ஃபார்ம் செய்திருந்தார்கள். உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அப்பாடலை, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன் பாடகிகள் தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்.

இந்நிகழ்வில் இப்பாடலை எழுதி இசையமைத்து அதில் நடித்திருந்த `தெருக்குரல்’ அறிவு இடம்பெறாதது சர்ச்சையானது. என்ஜாய் எஞ்சாமி பாடலின் வெற்றிக்கு தெருக்குரல் அறிவின் பங்கு முக்கியமானது எனும் நிலையில் அவர் மேடையில் இடம்பெறாதது சர்ச்சையானது.

இந்நிலையில் இன்று இப்பாடல் குறித்த முக்கியமான ஒரு பதிவை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் பாடகர் அறிவு.

அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பவை:

“இந்த பாடல் முழுமை பெற்றதில் கூட்டு முயற்சியும் (Team Work) இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இப்பாடல், `எல்லாமும் எல்லோருக்குமானது’ என்று சொல்லும் கருத்திலும் சந்தேகமில்லை. ஆனால் அதற்காக இப்பாடல் வள்ளியம்மாளின் சரித்திரத்தையோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமைகளாக இருந்து அவதிப்பட்ட என் முன்னோர்களின் சரித்திரத்தையோ குறிக்கவில்லை என்று பொருள் இல்லை. என்ஜாய் எஞ்சாமி பாடலை போலவே, என்னுடைய ஒவ்வொரு பாடலும், ஒரு தலைமுறையினர் சந்தித்த ஒடுக்குமுறையை அடையாளப்படுத்தும் விதமாகவே இருக்கும்.

image

நம் நிலத்தில் 10,000-த்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசை உள்ளது. அவை ஒவ்வொன்றும் நம் முன்னோர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்களே. இப்படி அனைத்தையும் பாடல் வழியே சொல்லக்காரணம், நம் தலைமுறையே நமது ரத்தமும் வியர்வையுமான வரலாற்றை இசையின் வடிவில், கலையின் வடிவில் கேட்கும் தலைமுறைதாம். அந்தவகையில் நாம் நம் பாடல்கள் மூலமே பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறோம்.

View this post on Instagram

A post shared by Arivu (@therukural)

இந்த என்ஜாய் எஞ்சாமி பாடலை, முழுக்க முழுக்க நானே `எழுதி’ `இசையமைத்து’ `பாடி’ `திரை முன் நடித்து’ பெர்ஃபார்ம் செய்தேன். இப்பாடலுக்காக யாரும் எனக்கு ட்யூன் போட்டு கொடுக்கவில்லை; மெலடியோ அல்லது ஒரே ஒரு ஒற்றை வார்த்தையையோ கூட வேறு யாரும் எனக்கு கொடுக்கவில்லை. இப்பாடலுக்காக கிட்டத்தட்ட 6 மாதங்கள் கண்விழித்து, தூங்காமல் மிகுந்த மன அழுத்தத்துக்கு மத்தியில் நான் உழைத்திருக்கிறேன்.

image

நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். ஆனால் நீங்கள் விழித்திருக்கும் போது முடியாது. முடிவில் உண்மை எப்போதும் வெல்லும்” என்றுள்ளார்.

ஏற்கெனவே முன்பொருமுறை `Rolling Stone India' என்ற ஆங்கில தளத்தில் இப்பாடலை பாராட்டும் வகையில் பதிவொன்று குறிப்பிடப்படுகையில் பாடகர் அறிவின் பெயர் இடம்பெறாமல் இருந்தது. அறிவின் பெயர் இடம்பெறாதது அந்த நேரத்தில் பெரும் விவாதத்துக்கு உள்ளானது. தற்போது செஸ் ஒலிம்பியாட்டிலும் பாடகர் அறிவு இடம்பெறாமல் இப்பாடல் ஒலிக்கப்பட்டிருப்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு விளக்கமளிக்கவே பாடகர் அறிவு தற்போது பதிவிட்டிருப்பதாக பலரும் அறிவின் கமென்ட் செக்‌ஷனில் தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்