பரியனுக்கு புரிந்தது ஜோவுக்கு எப்படி புரியாமலேயே போகும்!! பரியேறும் பெருமாள் ஓர் ரிவைண்ட்

ஒரு குளத்தில் கல்லை எறிந்த பின்னர் சிறிது அங்கு சலனத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடும். அப்படித்தான் பரியேறும் பெருமாள் திரைப்படமும் பார்த்தவர்களின் மனங்களில் படிந்திருந்த சாதி எனும் நீர்க்குளத்தில் கல்லை விட்டெறிந்தது. கலையால் வடிக்கப்பட்ட அந்த கல்லின் தாக்கம் படம் பார்த்தவர்களின் மனதில் நிச்சயம் சில நாட்களாக குடிகொண்டிருந்திருக்கும். சாதி எனும் அன்பை கொல்லும் அரக்கனுக்கு எதிராய் கேள்விக்கணைகளை தொடுத்திருக்கும். பலரையும் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும்.

ஒரு பிரசார நெடியில் இல்லாமல், உணர்த்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருந்தது தான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். அதற்கு முன்பு பா.ரஞ்சித் எடுத்திருந்த படங்களில் இந்த உணர்த்துதல் இல்லாமல் இருந்ததாகவும், ஒரு கலைப்படைப்பாக சில விமர்சனங்களை சந்திக்க செய்திருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு திரைப்படமாக, தான் சொல்ல வந்ததை க்ளியர் அண்டு க்ளியராக பேசியிருப்பார். இந்தப் படத்தை பெரிய அளவில் பலரும் கொண்டாடி தீர்த்தார்கள். படம் வெளியான தருணத்தில் விமர்சன ரீதியாகவும் அப்படியொரு பாராட்டினை பெற்றது. படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் இந்த படம் குறித்து விவாதிக்க ஏதேனும் இருக்கா? என்ற கேள்வி எழலாம். ஆம், நிச்சயம் இருக்கிறது. படம் குறித்து பல விஷயங்கள் இருக்கிறது என்றாலும் பரியனுக்குள் இருக்கும் தயக்கம் என்ற விஷயத்தை மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளலாம். பரியன் - ஜோ - ஆனந்த்.. இந்த மூவரும் முழு புரிதலுக்கு ஏன் வர முடியவில்லை. அதற்கு எது காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

image

தன்னை அவமானப்படுத்திய ஜோவின் சகோதரன் உள்ளிட்டவர்களை பரியன் கண்மூடித்தனமாக தாக்க முயற்சிப்பான். பின்னர், இந்த பிரச்சனை பரியனின் நண்பன் ஆனந்த்துக்கு (யோகி பாபு) தெரியவந்து அங்கு வந்து சேருவான். என்ன நடந்தது என்று பரியனிடம் விசாரிப்பான். ’என்ன காரணத்திற்காக நீ அவங்கள அடிச்சணு சொல்லு நானும் அடிக்கிறேன்’ என்று சொல்வான் ஆனந்த். ஆனால், பரியனோ தன்னுடைய மவுனத்தை கலைக்காமல் பிடிவாதமாக இருப்பான். பரியன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று ஜோவுக்கு குழப்பமாகவே இருக்கும். பரியனுக்கு நடக்கும் எந்த பிரச்சனையும் சாதிய ரீதியான அவமானங்களும் ஜோவுக்கு தெரியவே இல்லை. ஆனால், அவருக்கு வயது 18. நெல்லையில் பிறந்து வளர்ந்த ஜோவுக்கு வெளி உலகத்தை பற்றிய எவ்வித புரிதலுமே இல்லை. பரியனுக்கு நடப்பது குறித்து பரஸ்பரம் யோகிபாபுக்கு முழு புரிதல் இல்லை. இது சற்றே விநோதமாகவே இருக்கும். இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை.

image

ஒரு விவாதத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கலைப்படைப்புகளை உருவாக்குவதாக சொல்லிவிட்டு தன் கதாபாத்திரங்களை கொஞ்சமும் கூட விவாதிக்க விடாமல் ஏன் இயக்குநர் கையாண்டார். சாதியை கடந்து நண்பர்கள் இருப்பதில்லையா?. வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய பிரச்சனைகளுக்காக நிற்க மாட்டார்களா?. அதுவும் எப்பொழுதும் கூடவே இருக்கும் எல்லையற்ற அன்பை பொழியும் அவர்களுக்கு எப்படி புரியாமல் போகும்?

மீண்டும் மீண்டும் எங்கள் வலி யாருக்கும் புரியவில்லை என்ற தொனியிலே தலித் படைப்பாளர்கள் சிலரது குரல்கள் ஒலிக்கிறதா?. இது ஒருவகையில் அவநம்பிக்கையின் வெளிப்பாடுதானே. இரு மனங்கள் உறவுகொள்ள துவங்கும் தொடக்க நிலையில் புரிய வாய்ப்பு இல்லைதான். அது நட்போ, காதலோ எதுவாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல புரிதல் ஏற்பட ஏற்பட ஒருவரை பற்றி ஒருவருக்கு தெரியாத விஷயங்கள் உண்மையில் மிகவும் குறைவாகவே இருக்கும். அதுவே உண்மையான உறவின் வெளிப்பாடு. ஆனால், பரியனுக்கும் ஜோவுக்கு இடையில் நீண்ட இடைவெளி கடைசி வரை இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கு பரியன் காரணமா? அல்லது ஜோவின் அறியாமையா?.

image

அன்புக்கு எது தடையாக இருக்கிறதோ அதனை அந்த மனங்கள் இணைந்துதானே போராட வேண்டும். அதைவிடுத்து தனித்தே மனத்திற்குள் ஒரு போராட்டத்தை பரியன் நிகழ்த்திக்கொண்டே இருப்பது அதும் க்ளைமேக்ஸ் வரை எப்படி நியாயமாக இருக்க முடியும். அவர்கள் நெல்லையின் கிராமங்களில் வளர்ந்தவர்கள்தானே. அவர்களுக்கு சமூகத்தின் யதார்த்த சூழல் எப்படி புரியாமல் போகும். ஒருவேளை பள்ளிப் படிப்பு வரை கூட புரியாமல் போகலாம். கல்லூரி காலம் என்பது எல்லாவற்றையும் சற்றே மெச்சூரிட்டியான தன்மையுடன் அணுகும் பருவம், உலகை அறிந்து கொள்வதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ள காலம். அந்த தருணத்தில் நண்பரோ, காதலியோ யாராக இருந்தாலும் ஒற்றைப் புள்ளியில் ஒரு புரிதலுக்கு ஏன் வர முடியவில்லை? அதற்கான விவாதத்தை மூவருக்கு இடையில் கூட நிகழ்த்தாமல் தவிர்த்தது ஏனோ?

image

சாதி என்பது தேவையில்லாமல் நாம் தூக்கி சுமக்கும் சுமைதான். அதை விட்டு ஒழிக்க எல்லா தரப்பில் இருந்தும் மனிதர்கள் முன்வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதற்கு எதிராக தொடர்ந்து போராட்ட களத்திலும் இருக்கிறார்கள். நெல்லை மண்ணை பற்றி சொல்லவே தேவையில்லை. பலரும் அந்த மண்ணில் இருந்து புயலாய் புறப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல. இந்த புரிதல் மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது பாதிக்கப்பட்டவன் பேசினால் தான் பிரச்சனையை தெளிவாக பேச முடியும் என்ற வாதம் மிகவும் அபத்தமானது அல்லவா? ஏனெனில் இந்த திரைப்படம் வெளியான தருணத்தில் மாரி செல்வராஜால் தான் இப்படியொரு படத்தை உண்மைக்கு நெருக்கமாக எடுக்க முடியும் என்று முன்னணி இயக்குநர்கள் பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். பாதிப்பை உணர்வதற்கும் அதை கலைப்படைப்பாக உருவாக்குவதற்கும் அதே சமுதாயத்தில் பிறந்திருக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் கிடையாது. ஒரு அநீதியை கொடுமையை உணர்வதற்கு நல்ல மனிதராக இருந்தாலே போதுமானது. உண்மையின் பக்கம் நின்று பேச வேண்டும் என்பதே அதற்கான நிபந்தனை. ஏனெனில் பரியன் கதாபாத்திரத்தில் ஏதோ ஒருவித ரிசர்வ்டு தன்மை இருக்கிறது.

image

பரியன் கதாபாத்திரத்தை பொருத்தவரை ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் அது யதார்த்தத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமாக இருந்தாலும் அது இயக்குநர் உருவாக்கியதே. அதன் ஒவ்வொரு அசைவும் இயக்குநரின் புரிதல்தான். பரியனை எல்லோரின் மனதுடனும் கலக்கவிட வேண்டும். அதற்கு இயக்குநரே தடையாக இருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த மனங்கள் கூடிதான் சாதி எனும் தீய சக்தியை எதிர்க்க வேண்டும். பரியன்கள் ஒருபோதும் தனிமைப்பட்டு விடக்கூடாது. அது மேலும் ஆபத்திலேதான் முடியும். பரியனின் வலி ஜோவுக்கும் ஆனந்திற்கும் நிச்சயம் புரியும் என்று முதலில் இயக்குநர் நம்ப வேண்டும். மற்றவை அதன் இயக்க போக்கில் நடக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்