PS1 - நினைத்ததை சாதித்திருக்கிறாரா மணிரத்னம்? #PTReview

கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு, திரை வடிவத்தைக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். அரியணைக்கான போர், சூழ்ச்சியால் நிகழும் குழப்பங்கள், வஞ்சத்தால் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிகள், உறவு, காதல், நட்பு, பகை என அனைத்தும்தான் பொன்னியின் செல்வன். அதை கூடிய வரை உயிர்ப்புடன் திரைக்குக் கடத்தியிருக்கிறார்.

ராஷ்ட்ரகூடத்தில் போர் வெற்றிக்குப் பின் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), தன் நண்பன் வந்தியத்தேவனிடம் (கார்த்தி) ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிரான சதித் திட்டம் ஒன்று கடம்பூர் மாளிகையில் தீட்டப்படுகிறது. அது என்னவென அறிந்து தன் தந்தை சுந்தரச்சோழரிடமும் (பிரகாஷ் ராஜ்), தங்கை குந்தவையிடமும் (த்ரிஷா) சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த பொறுப்பு. அதை ஏற்கும் வந்தியத்தேவன் பயணப்படுவதில் தொடங்குகிறது படம்.

image

கடம்பூர் சம்புவரையர் மாளிகை, தஞ்சை கோட்டை, பழையரை, இலங்கை என நீள்கிறது அவனது பயணம். ஒரு பக்கம் சோழ சாம்ராஜ்யத்தை சரிக்க நந்தினி (ஐஸ்வர்யா ராய்) போடும் திட்டங்கள், பதவி ஆசையால் மதுராந்தகன் (ரகுமான்) பழுவேட்டரையர் (சரத்குமார்) மற்றும் குறுநில மன்னர்களின் சதி, இன்னொரு பக்கம் எப்படியாவது இந்த ஆபத்துகளில் இருந்து நாட்டைக் காக்க குந்தவை (த்ரிஷா) எடுக்கும் முடிவுகள் என நீள்கிறது பொன்னியின் செல்வன் முதல் பாகம்.

image

இந்திய சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்கள் பலருமே தங்கள் ஆதர்சமாக மணிரத்னம் என்கிற பெயரை ஏன் சொல்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் விடை சொல்லியிருக்கிறது. தமிழகத்தின் ஆல்டைம் ஃபேவரைட்டான ஒரு புத்தகத்தின் காட்சிகளை திரைக்கு கடத்துவது, அதன் ஆதார உணர்ச்சிகளை கெடுத்துவிடாமல் எடுத்திருப்பது, இதன் கூடவே தன் வழக்கமான முத்திரை எல்லாவற்றையும் ஒரு சேர சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்.

ஆதித்த கரிகாலன் - நந்தினியின் காதல், நந்தினிக்கு சோழ சாம்ராஜ்யத்தின் மீது ஏற்படும் விரோதம், அதன் பின் விளைவுகளாக நடக்கும் சம்பவங்கள் என்பதை மையப்புள்ளியாக எடுத்துக் கொண்டது, யுத்த களத்தில் ஆரம்பிக்கும் கதை மீண்டும் ஒரு யுத்தத்தை நோக்கி செல்வது என திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் உரையாடல்களும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது.

வரலாற்றை உலுக்கிய ஆதித்த கரிகாலன் கொலை! ஆயிரம் ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சு! | Chola prince Aditha Karikalan killed! A mystery that has not been revealed for a thousand years ...

சில காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த விதத்தில் மணிரத்னத்தின் சிக்னேச்சர் ஸ்டைல் தெரிந்தது. குறிப்பாக ஆதித்த கரிகாலன், நந்தினியுடனான காதலைப் பற்றி விவரிக்கும் காட்சி மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியில் விக்ரம் தன் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நந்தினி - குந்தவை தஞ்சைக் கோட்டையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி கிட்டத்தட்ட ஒரு போர்க் களத்தை பிரதிபலிப்பது போலவும், இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதைப் போல எடுக்கப்பட்டிருந்ததும் அட்டகாசம். இப்படி படம் நெடுக சில காட்சிகள் மணிரத்னத்தின் மேக்கிங்கை கவனிக்க வைக்கிறது.image

நடிகர்களாக பலரும் நம்மைக் கவர்கிறார்கள். நந்தினி பாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராய், தன் அழகினால் பழுவேட்டரையரை பலவீனமாக்குவது, அரியணையை நெஞ்சுக்குள் தீ எரியும் உணர்வுடன் பார்ப்பது, குந்தவையிடம் பேசும் போது மனதிற்குள் வெறுப்பையும், வெளியில் அதை மறைத்தும் நடந்து கொள்வது என வரும் காட்சி ஒவ்வொன்றிலும் சிறப்பு.

image

வந்தியத்தேவனாக பெண்களிடம் வழிந்து பேசுவது, ஆழ்வார்கடியன் நம்பியை கிண்டலடிப்பது என கார்த்தி வரும் காட்சிகள் ஆர்வமாகப் பார்க்க வைக்கிறது. பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் கம்பீரமாக வந்து செல்கிறார்.

இந்தக் கதைக்குள் எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் இருப்பதால், அந்தந்த கதாபாத்திரத்திற்கு என இருக்கும் சிறப்பான காட்சிகள் பலவும் படமாக மாற்றும்போது குறைந்துள்ளது. எனவே அதன் விளைவாக சில கதாபாத்திரங்கள் சட்டென வந்து செல்கிற அளவே இருக்கிறது. பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, அஷ்வின் எனப் பலரது பாத்திரங்கள் அப்படி படக்கென வந்து போகிறது.

image

ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் அழகைக் கூட்ட மிக அழுத்தமாக உழைத்திருக்கிறது. போர்களக் காட்சிகள், அரண்மனை காட்சிகள், ஆகியவற்றில் பிரம்மாண்டத்தைக் காட்டிலும் இயல்பான ஒரு தன்மையைக் கொடுத்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு மிக நேர்த்தியாக அமைந்திருந்தது. குறிப்பாக நந்தினியை மீண்டும் கரிகாலன் சந்திக்கும் காட்சியின் காட்சிக் கோர்வை மிக கச்சிதமாக இருந்தது.

image

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே பெரிய ஹிட். பாடலை, படத்தில் எவ்வளவு சுருக்கமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசை உணர்வு சார்ந்த காட்சிகளை அழகாக அமைந்திருந்தாலும், சில இடங்களில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற உணர்வு தோன்றியது.

அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்க ரியல் லொகேஷன், செட் சிஜி என மூன்றிலும் முயன்றிருக்கிறார்கள். ஆனால், சிஜி சம்பந்தப்பட்ட பல காட்சிகள் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சிகள் எல்லாம் மிகவும் சுமாரான விதத்தில் சிஜி அமைக்கப்பட்டிருந்தது. கூடவே படம் தமிழின் முதல் ஐமாக்ஸ் திரைப்படம் என்ற டேகுடன் வெளியாகியிருக்கிறது. ஆனால், ஐமாக்ஸ் திரையில் பார்த்தே ஆக வேண்டும் என்ற அளவிற்கு எதுவும் இல்லை. நல்ல ப்ரொஜக்‌ஷன் உள்ள திரையங்கில் என்ன விஷுவல் ட்ரீட் கிடைக்குமோ அதுவேதான் ஐமாக்ஸிலும் கிடைத்தது.

image

இந்த படத்தின் மிகப்பெரிய சவாலே, எல்லோருக்கும் மேலோட்டமாகவாவது தெரிந்த ஒரு கதை, அதை எந்த அளவு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக சொல்லப் போகிறோம் என்பதுதான். அந்த விதத்தில் முடிந்த வரை சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார். ஆனால், எந்தக் காட்சிகள் விரிவாக இருக்க வேண்டும் என்கிற தெளிவு இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. வானில் தோன்றியிருக்கும் வால் நட்சத்திரம், சோழ சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு இரத்த பலி கேட்கிறது என கமலின் வாய்ஸ் ஓவரில் தொடங்கி நகரும் கதையில் சொல்லாமல் விட்ட இடங்களை நம்மால் உணர முடிகிறது. பாண்டியர்களுக்கான பகை உட்பட சரிவர சொல்லப்படாத சில விஷயங்களும் இருக்கின்றன. இது போன்ற குறைகள் இருந்தாலும், தமிழில் முக்கியமான முயற்சியாக பொன்னியின் செல்வனை தாராளமாக சொல்லலாம்.

காரணம், ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை புதிதாக கேட்பதுபோல ஆச்சர்யத்துடன் ஆடியன்ஸை உட்கார வைத்தது. அதற்குள்ளே அடுத்த பாகத்திற்கான ஆவலுக்கும் விதை போட்டது என நினைத்ததை சாதித்திருக்கிறார் மணிரத்னம்.

- ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்