`தளபதி 67-ல நடிக்கிறேனா? கைதி 2 ஷூட்டிங் எப்போன்னா...’- சர்தார் விழாவில் நடிகர் கார்த்தி
தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகர் கார்த்தி.
சர்தார் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று மாலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் லக்ஷ்மன், இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒப்பனைக் கலைஞர் பட்டணம் ரஷீத், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயண், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன், கலை இயக்குநர் கதிர், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும் போது, “முதலில் கார்த்திக்கு வாழ்த்துகள். தொடர்ச்சியாக மூன்று ஹிட்ஸ், மூன்றும் வெவ்வேறு ஜானர் படங்கள். சர்தாரில் ஏறுமயிலேறி பாடலை கார்த்தி பாடினார். அதற்காக 7 மணிநேரம் ரெக்கார்டிங் நடந்தது. அவ்வளவு கடினமான பாடலை பாடிக் கொடுத்தார். இந்தக் கதை சொல்லும் போது இதை எடுப்பது மிகக் கடினம் எனத் தோன்றியது. ஆனால் வெற்றிகரமாக இதை எடுத்து முடித்தார் மித்ரன்.
மித்ரன் ஒரு டாஸ்க் மாஸ்டர். என்ன காட்சிக்கு எப்படி இசை வேண்டும் என சொல்லி சொல்லி வாங்குவார். சில சமயம் வாயிலேயே வாசித்துக் காண்பிப்பார். சில சமயம் ஒரு முழுப் பாடலை பதிவு செய்து பின்பு அதை தூக்கி எறிந்துவிட்டு புது பாடலை உருவாக்கிய சம்பவம் எல்லாம் கூட நடந்தது. சர்தாரின் வெற்றி பலருக்கும் நம்பிக்கையை கொடுக்கும். இது போன்ற சமூக பிரச்சனை பேசும் கதைகளும் வெற்றி பெறும் என பலரும் இது போன்ற கதைகளை எடுப்பார்கள்"
இயக்குநர் மித்ரன் பேசுகையில், "Journey is more important than destination (இலக்கைவிட, இலக்கை நோக்கிய நம் பயணம்தான் முக்கியம்) என சொல்வார்கள். அது போல இந்தப் படத்தின் பணிகள் யாவும் ஒரு புயலுக்குள் செல்வது எனத் ஆரம்பிக்கும் போதே தெரியும். படத்தில் வேலை செய்யும் யாராலும் சந்தோஷமாக வேலை செய்ய முடியாது என்பதும் தெரியும். ஆனாலும் இப்போது எல்லோரும் ஒரு புது அனுபவம் கிடைத்தது என சொல்கிறார்கள். இது அவர்களது சின்சியாரிட்டியைக் காட்டுகிறது. அதற்கு என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
இந்தப் படதின் ஒவ்வொரு கட்டடமும் சவாலாகவே இருந்தது. கதையில் இருந்து திரைக்கதையாக மாற்றும் போது கதை வளர்ந்து கொண்டே இருந்தது. அதை சுருக்குவது, ஷூட் செய்யும் போது, எடிட் செய்யும் போது என எல்லாவற்றிலும் சவால். அதை சமாளிக்க முடிந்ததற்கு காரணம் என்னுடைய குழுதான்.
இந்தப் படத்தைப் பார்த்த ஒருவர் ஒரு மெத்தையில் இருக்கும் மொத்த பஞ்சையும் தலையணையில் அடைத்திருக்கிறீர்கள் என்றார். அவ்வளவு விஷயங்களை படத்தில் சேர்த்திருக்கிறோம். ஜி.வி.பிரகாஷ் எத்தனை முறை புது ட்யூன் கேட்டாலும் முகம் சுளிக்காமல் வேலை பார்த்தார். கார்த்தி சாரின் அர்பணிப்பு எனக்கு ஆச்சர்யம் தந்தது. அவரின் உந்துதல்தான் இந்தப் படம் வளர முக்கிய காரணம். இந்தக் கதாபாத்திரம் கூத்தில் ஆடும் பாடலை நானே பாடினால் தான் சரியாக இருக்கும் என அவரே முன்வந்து பாடலைப் பாடினார். இந்தப் பட வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அத்தனை பேரின் உழைப்புக்கும் நன்றி” என்றார்.
தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசுகையில், “இன்று கூட ஒருவர் படம் ஹிட்டானதைப் பற்றி என்னிடம் `உங்களுக்கு சந்தோஷமா’ எனக் கேட்டார், நான் `இல்ல, நிம்மதி’ என்றேன். நாம் நினைத்தது நினைத்த மாதிரி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் இந்த டீம் தான். இதை நான் பொன்னியின் செல்வனிலும் உணர்ந்தேன். இப்போது சர்தாரிலும் உணர்கிறேன்.
இந்தக் கதையை ஒருவர் சொல்லி சம்மதிக்க வைப்பது கஷ்டம். எடுப்பது அதை விட கஷ்டம். ஆனால் அதை மெனக்கெடலுடன் உருவாக்கியிருக்கிறார்கள். சர்தார் கதாபாத்திரமாக நடிப்பது சவாலான ஒன்று. அந்தக் கதாபாத்திரத்தை வெளிப்படுத்த மனதுக்குள் தேசத்தைப் பற்றிய பெருமை இருக்க வேண்டும்.
நாட்டுக்காக குடும்பத்தை தியாகம் செய்யும் உணர்வும் இருக்க வேண்டும். இதை மனதில் வைத்து நடித்தேன். படத்துக்காக பல லுக் போட்டேன். ஒவ்வொரு கெட்டப்புக்கு மேக்கப் போடும் போதும் அவ்வளவு எரியும். ஆனால் நமக்கு முன் இந்தக் கஷ்டத்தை பல ஜாம்பவான்கள் அனுபவத்திருக்கிறார்கள் என என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன். இப்போதைய தலைமுறையினர் ஸ்பை படம் என்றாலே நெட்ஃப்ளிக்ஸ் தொடர்கள், படங்களுடன் ஒப்பிடுவார்கள் என்பதையும் கவனத்தில் வைத்து உழைத்தோம். அதன் பலன் இன்று கிடைத்திருக்கிறது” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார் நடிகர் கார்த்தி. அந்த உரையாடலின் சிறு தொகுப்பு இங்கே:
கைதி 2 பற்றி சொல்லுங்க...
“அதன் வேலைகள் அடுத்த ஆண்டு துவங்கும்”
தளபதி 67 (லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்) படத்தில் நடிப்பீர்களா?
"அதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. அதன் தயாரிப்பு நிறுவனம் வேறு, கைதி தயாரிப்பு நிறுவனம் வேறு. அது எந்தளவு சாத்தியம் எனத் தெரியவில்லை"
சர்தார் படத்தில் ப்ளாஸ்ட்டிக் பாட்டில்கள் பற்றிய அபாயம் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் தாக்கம் உங்களுக்கு எப்படி இருந்தது?
"இந்த படத்தின் கதையை கேட்கும்போதே ஒரு 10 லிட்டர் சில்வர் கேன் வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டேன்."
அப்பா சிவகுமார், அண்ணன் சூர்யா,அடுத்து நீங்கள் என மூவரும் முருகன் வேடம் ஏற்று நடித்துள்ளீர்கள். யார் பொருத்தமானவர் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
“அப்பா தான் என்பது ஊருக்கே தெரியும்”
மேலும் நிகழ்வின் முடிவில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது என அறிவித்தது படக்குழு.
இந்த நிகழ்வை வீடியோவை வடிவில் கீழே காணலாம்:
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
கருத்துகள்
கருத்துரையிடுக