தனியாரிடம் ஒப்படைப்பதா?-‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்’ குறித்து திருமா, எஸ்டிபிஐ கேள்வி

‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்’ குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

இதுகுறித்து விசிக கட்சியின் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு 'இல்லம் தேடி கல்வி' , 'எண்ணும் எழுத்தும்', 'நான் முதல்வன்'  எனப் பல்வேறு திட்டங்கள் முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகிய திட்டங்கள் முன் எப்போதும் விட மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்த்திருக்கின்றன.

இந்நிலையில் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்'  என்ற புதிய திட்டத்தை தனியாரின் பங்கேற்போடு நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. ’கல்வியின் தரம் என்பது பள்ளியின் உள் கட்டமைப்பு முதல் ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கற்பித்தல், விளையாட்டு மற்றும் பண்பாடு, பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் என்பது வரை பரந்து விரிந்து உள்ளது’ எனத் தமிழ்நாடு அரசு சரியாக இந்தப் பிரச்சனையை அடையாளம் கண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகள் என்ற பட்டியலில் ஆதிதிராவிட நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளும் உள்ளடக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதாகும். ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ விரும்பினால் ஒரு பள்ளிக்கு நன்கொடை அளிப்பதற்கும் அல்லது ஒரு பள்ளியைத் தத்தெடுத்துக் கொள்வதற்கும் இதில் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

image

இந்திய ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு தொகையை கல்விக்காக செலவிடுவோம் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து செலவிடும் தொகை 4 விழுக்காடு என்ற அளவிலேயே உள்ளது. அதிலும் ஒன்றிய அரசு கல்விக்காக செலவிடும் தொகை ஒட்டு மொத்தத்தில் ஒரு விழுக்காடு என்ற அளவில்தான் இருக்கிறது.

 கடந்த 30 ஆண்டுகளாக கல்வியானது தொடர்ந்து தனியார்மயம் ஆகி வருகிறது. இதனால் பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மாநிலத்தின் மனித வள மேம்பாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிக் கல்வி என்பது கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாகி வருவதைப் பார்க்கிறோம். இதை மாற்றுவதற்காகத்தான் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த திரு வேணு. சீனிவாசனை பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. பொதுக் கல்விக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் எந்த ஒரு பெரிய பங்களிப்பையும் அவர்கள் செய்த வரலாறு கிடையாது. அத்தகைய ஒருவரை இந்த பவுண்டேஷனில் தலைவராக நியமிப்பது சரியல்ல என்கிற புகார்கள் எழுந்துள்ளன. இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்த பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும். மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது. மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் எவரும் இடம் பெறவில்லை. கல்வியில் ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியமாகும்.

ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ நன்கொடை அளிக்கவோ முன்வருகிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளியைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடுபட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படாமல் அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயகப் பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

எஸ்.டி.பி.ஐ. அறிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிச.19 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் அரசு சாராத, தனியார் தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்தித் தர முடியும் என்று அந்த திட்டத்தின் நோக்கத்தை தமிழக அரசு கூறியுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருவது என்பது அரசின் முக்கிய கடமை என்கிற நிலையில், தனியார் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளுக்கான கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக அரசால் தொடங்கப்பட்ட நம்ம ஸ்கூல் அறக்கட்டளைக்கு, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கல்விப் பணிகளில் எந்த பெரும் பங்களிப்பையும் ஆற்றாத தனியார் தொழில் அதிபரை நியமித்திருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

அதேபோல் அரசுப் பள்ளிகளை தனியார் சமூக பங்களிப்பு மூலம் மேம்படுத்த வேண்டும் என்கிற பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாகவும் தமிழக அரசின் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டம் உள்ளது என்கிற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணிக்க முடியாது.

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு, மறுபுறம் புதிய தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைக்களுக்கு இசைவாக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்கள் உள்ளன என்றும், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டமும் அந்த அடிப்படையிலானது தான் என்றும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

image

முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அவரவர் படித்த மற்றும் அவரவர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது என்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை தான். ஆனால், அதற்கான உதவிகளை பெற்று அரசே நேரடியாக செய்யாமல், தனியார் தொழில் அதிபரை இயக்குநர்களாக கொண்ட அறக்கட்டளை மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. இது அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் பொறுப்பில் உள்ள கடமையிலிருந்து அரசு விலகிச் செல்லும் திட்டமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

மக்கள் வரிப்பணத்தில் உருவான அரசுக் கல்வி நிறுவனங்களை பாதுகாத்து, போதுமான நிதி ஒதுக்கி அவற்றை மென்மேலும் மேம்படச் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதே நியாயமாகும். ஆனால், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நல்ல நோக்கத்தை தனியாரிடம் ஒப்படைத்து பொறுப்பிலிருந்து விலகுவது மிகவும் ஆபத்தானதாகும்.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் எனக்கூறி சிறப்பு ஆசிரியர்களை இந்த பவுண்டேஷன் மூலம் நியமித்தால் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையிலிருந்தும் அரசு விலகிவிடும் ஆபத்தும் உள்ளது. இது ஆசிரியர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை பறிப்பதோடு, ஏற்கனவே பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கிவிடும்.

அதேபோல், இந்த பவுண்டேஷன் மூலம் மாணவர்களின் திறன் வளர்ப்பு நடவடிக்கை என்கிற பெயரில் தமிழக கலாச்சாரத்துக்கு பொருந்தாத பாடங்களை சிறப்பு வகுப்பு மூலம் திணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம். ஒட்டுமொத்தத்தில் கல்வித்துறை மூலம் அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் அனைத்தும் கைவிடப்பட்டு, முழுவதும் கல்வியானது தனியார் மயத்தை நோக்கி சென்றுவிடும் ஆபத்தும் உள்ளது என்கிற பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ஆகவே தமிழக அரசு, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நல்ல நோக்கத்தின் அடிப்படையிலான நடவடிக்கையை அரசே முன்னின்று செயல்படுத்திட வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரை உட்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தை ஆட்சி செய்த முன்னோர்களின் பெரும் முயற்சியால் உருவான அரசுப் பள்ளிகளை தமிழக அரசே பாதுகாத்து, அவற்றை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்