”இதையும் கவனத்தில் கொண்டால்”- வேளாண் பட்ஜெட் குறித்து கார்த்தியின் பாராட்டும் வேண்டுகோளும்
நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி, 2023- 2024க்கான வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ள அதேவேளையில், ஒரு சில கோரிக்கைகளும் அறிக்கை வாயிலாக வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று காலை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம். வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நம் மாணவர்கள் உழவு பற்றியும், உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு. நீர் நிலைகள் சீரமைப்பு, மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது.
இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால் அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
கருத்துகள்
கருத்துரையிடுக